Monday, January 23, 2012

சிவ ஆகமம் – ப்ரதக்ஷிணம் - பூஜை இல்லாவிடில்.

சிவ ஆகமம் – ப்ரதக்ஷிணம்

14.1 எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையின் பலன் கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக பக்தியுடன் அவசியம் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

14.2 விநாயகருக்கு – ஒரு ப்ரதக்ஷிணம், சூர்யனுக்கு – இரண்டு ப்ரதக்ஷிணங்கள், சிவனுக்கு – மூன்று ப்ரதக்ஷிணங்கள், அம்பாளுக்கும், விஷ்ணுவுக்கும் – நான்கு ப்ரதக்ஷிணங்கள், அரசமரத்திற்கு – ஏழு ப்ரதக்ஷிணங்கள். உச்சி காலத்துக்குப் பிறகு அரசமரத்தை ப்ரதக்ஷிணம் செய்வது தவறு.


சிவ ஆகமம் – பூஜை இல்லாவிடில்.

15.1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன;

1. படைத்தல் – அபிஷேகம்.

2. காத்தல் – நைவேத்யம்

3. ஸம்ஹாரம் – பலி போதல்

4. திரோபாவம் – தீபாராதனை

5. அனுக்ரஹம் – ஹோமம்,

பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும்?

15.2. பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்தனம் இல்லாவிடில் குஷ்டரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத் தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.

15.3. 1. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும்.

2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும்.

3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும்.

4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும்.

5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷாமம் (பஞ்சம்) உண்டாகும்.

6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும்.

7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும்.

8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும்.

9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும்.

10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.

சிவ ஆகமம் – மறை ஓதுதல்

சிவ ஆகமம் – மறை ஓதுதல்

13.1 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் ஆகிய காலங்களில் வேத கோஷம் செய்யவேண்டும்.

13.2 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் பூஜையின் முடிவு ஆகிய காலங்களில் பக்தர்கள் ஸ்தோத்ரங்கள் பாடலாம்.

13.3 வேதங்கள் ஓதிய பின் (அல்லது வேதங்கள் ஒதிக் கொண்டிருக்கும்போதே, மண்டபத்தின் மற்றோர் பகுதியிலிருந்து) தமிழ் மறைகளாம் பன்னிரு திருமுறைப் பாடல்களையும் மற்ற தோத்திரப் பாடல்களையும் ஓத வேண்டும்.

13.4 ஓதுவார்கள்: திருமுறைகளைப் பண்ணோடு ஓதுபவர்கள் ஓதுவார்கள் அல்லது ஓதுவார் மூர்த்திகள் என்று பெயர் பெறுவர்.

13.5 பண்; திருஞான சம்பந்தப் பெருமானுக்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரின் வழி வந்த, இசை வல்ல ஒரு பெண்மணியார் திருமுறைகளுக்கு ஏற்ப பண்கள் அமைத்ததாக வரலாறு. முன்னர் இருந்த 103 பண்களில் இக்காலம் பயிலப் பெறுபவை ஏறத்தாழ 23 பண்களே.

13.6 இசை மரபு ஒப்புமை: தமிழிசைப் பண்களில் வரும் ஏழு இசைகளுக்கு இணையான ஸ்வரங்கள் –

1 இளி – ஸ – ஷட்ஜம்

2 விளரி – ரி – ரிஷபம்

3. தாரம் – க – காந்தாரம்

4. குரல் – ம – மத்திமம்

5. துத்தம் – ப – பஞ்சமம்

6. கைக்கிளை – த – தைவதம்

7. உழை – நி – நிஷாதம்.

13.7 பாடலுக்குரிய இராகங்கள் – திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் மோஹன ராகத்திலும், திருவிசைப்பா – திருப்பல்லாண்டு பாடல்கள் அனைத்தையும் ஆனந்தபைரவி ராகத்திலும், பெரியபுராணப் பாடல்கள் அனைத்தையும் மத்தியமாவதி ராகத்திலும் பாடுவதே மரபு. மாற்றிப் பாடுவது முறையல்ல.

13.8 பண்களுக்குரிய இராகங்கள் : பண்கள் குறிப்பிடப்பட்டுள்ள திருமுறைப்பாடல்களை, அப்பண்களைக் கற்றுணர்ந்தவர் அவ்வாறே இசைப்பதே முறை. தமிழிசை கற்றியாதார், தமிழிசைப் பண்களுக்கு ஒத்த கருநாடக மரபு இராகங்களிலும் இசைக்கலாம்.

தமிழிசைப் பண் அதற்கொத்த இராகம்

1. நட்டபாடை (நைவளம்) – நாட்டை, கம்பீர நாட்டை
2. தக்கராகம் – காம்போதி
3. தக்கேசி – காம்போதி
4. பழந்தக்கராகம் – சுத்தசாவேரி
5. குறிஞ்சி – ஹரிகாம்போதி
6. வியாழக்குறிஞ்சி – ஸெளராஷ்ட்ரம்
7. அந்தாளிக்குறிஞ்சி – சாமா
8. மேகராகக் குறிஞ்சி – நீலாம்பரி
9. யாழ்மூரி – அடாணா
10. காந்தாரம் – நவரோஸ்
11. பியந்தைக் காந்தாரம் – நவரோஸ்
12. கொல்லி – நவரோஸ்
13. கொல்லிக் கௌவாணம் – நவரோஸ்
14. இந்தளம் – மாயாமாளவகௌளை
15. சீகாமரம் – நாதநாமக்ரியா
16. நட்டராகம் – பந்துவராளி
17. சாதாரி – பந்துவராளி
18. செவ்வழி – யதுகுலகாம்போதி
19. காந்தார பஞ்சமம் – கேதாரகௌளை
20. பஞ்சமம் – ஆகிரி
21. பழம்பஞ்சரம் சங்கராபரணம்
22. கௌசிகம் பைரவி
23. புறநீர்மை (நேர்திறம்) – பூபாளம், பௌளை
24. செந்துருத்தி (செந்திறம்) – மத்யமாவதி
25. திருக்குறுந்தொகை – மாயாமாளவகௌளை
26. திருத்தாண்டகம் – ஹரிகாம்போதி
27.திருநேரிசை – நவரோஸ் (ஸாமகான இசை போல)
28. திருவிருத்தம் – பைரவி, சங்கராபரணம், அல்லது ஒத்த ராகங்கள்.

சிவ ஆகமம் – மணி அடித்தல்

சிவ ஆகமம் – மணி அடித்தல்

12.1 அபிஷேகத்தில் ஆரம்பம், அபிஷேகத்தில் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்யத்தின் ஆரம்பம், உத்ஸவத்தில் ஆரம்பம், உத்ஸவத்தின் முடிவு, நர்த்தனத்தின் முடிவு – இக்காலங்களில் மட்டுமே பெரிய மணி அடிக்க வேண்டும்,

12.2 கர்ஷணம் முதலான கிரியைகளின் ஆரம்பம், விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசன ஆரம்பம் ஆகிய காலங்களில் கை மணி அடிக்க வேண்டும்; தூப – தீபம் காட்டும்போதும், பலி காலத்திலும் இடைவிடாமல் கைமணி ஒலிக்க வேண்டும்.

12.3 மணி நாத கிரமம் :

1 அடி; மோக்ஷம்

2-அடி: போகம்,

3-அடி : சகல ஸித்தி,

புண்யாஹவாசனம், தூப-தீபம் நைவேத்யம், பலி ஆகிய காலங்களில் 2-அடி அடிக்கலாம்;

தீபாரதனையின்போது (விரைவாக) 1-அடி அடிக்க வேண்டும்;

மற்ற தேவைக்கு 3-அடி அடித்து பெரிய மணி நாதம் எழுப்ப வேண்டும்.

சிவ ஆகமம் – நைவேத்யம்

சிவ ஆகமம் – நைவேத்யம்

11.1 வண்டு மலரை முகர்ந்து தேனைப் பருகி, அந்தத் தேனை திருப்பித் தருகிறது; மலரின் மணமோ சுவையோ தன்மையோ நீரோட்டமோ கெடுவதில்லை. அதுபோல இறைவர்க்கு நிவேதித்த பிரசாதங்களின் ரஸம் போவதில்லை. மேகம் சூர்ய கிரகணங்களைக் கொண்டு நீரைக் குடித்து, அதையே பிறகு மழையாகப் பொழிகின்றது, அவ்வாறே, இறைவன் நிவேதனத்தைத் தன் பார்வையால் ஏற்றுக் கொண்டு, கருணை மழை பொழிந்து, நம்மைக் காக்கிறான்.

11.2 அபிஷேகத்தில் நிறைவு, அர்ச்சனையின் முடிவு ஆகிய இரண்டு சமயங்களில் நைவேத்யம் செய்ய வேண்டும்

11.3 மந்த்ராந்நம், நைவேத்யம்: மந்த்ரம் என்பது ரஹஸ்யம். பல்லிலும், உதட்டிலும், முகவாய்க் கட்டிலும் உற்பத்தி ஆவதால் மந்த்ரங்கள் ரஹஸ்யம் எனப்படுகின்றன. எந்த அந்நமானது ரஹஸ்யமாக நிவேதிக்கப்படுகிறதோ அதற்கு மந்த்ராந்நம் என்று பெயர். அத்தகைய மந்த்ராந்நமாகிய மஹாநிவேதனத்தை ஒரு பாத்திரத்தில் முக்காலியின் மேல் வைத்து, அதைச் சுற்றி, பாகம் பண்ணப்பட்ட (சமைக்கப்பட்ட) பதார்த்தங்களைத் தனித் தனிப் பாத்திரங்களில் வரிசையாக வைத்து, அவற்றை ஒன்றொன்றாகச் சோதனை செய்து, ஹ்ருதய மந்திரத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும். அந்த நிவேதனத்தை அம்ருதமயமாகப் பாவித்து, தேனு முத்திரை காட்டி, புஷ்பத்தை வைத்து, நைவேத்யத்தை ஸ்வாமியினுடைய தக்ஷிண ஹஸ்தத்திலே கொடுத்து, தீர்த்த பானத்தையும் கொடுக்க வேண்டும்.

11.4 மயிர், புழு, மணல், உமி இவை கலந்துள்ள அரிசிச்சோறு (அன்னம்) நைவேத்யத்திற்கு ஆகாது; அரை அரிசிச் சோறு, குழைந்த அன்னம், துர்நாற்றம் உள்ள அன்னம் ஆகியவையும் கூடாது; மிகச் சூடாக நிவேதனம் செய்யக்கூடாது.

11.5 ஈசான முகத்திற்கு சுத்த அன்னமும், தத்புருஷ முகத்திற்கு சர்க்கரைப் பொங்கலும், அகோர முகத்திற்கு எள் அன்னமும், வாமதேவ முகத்திற்கு தயிர் அன்னமும், ஸத்யோஜாத முகத்திற்கு வெண்பொங்கலும் படைப்பது சிறந்தது.

11.6 தாம்பூலத்தின் நுனியில் லக்ஷ்மி, மத்தியில் ஸரஸ்வதீ, பின்பகுதியில் மூதேவி ஆகியோர் உள்ளதாக ஐதீகம். எனவே, பின்பாகத்தை நீக்கிவிட்டு தான் வெற்றிலையை நிவேதனம் செய்ய வேண்டும்.

11.7 ஜலம் உள்ள தேங்காயைத்தான் உடைத்து நிவேதனம் செய்ய வேண்டும்; சமமாக இரு பாதியாக உடைப்பதே சிறந்தது; குடுமி இல்லாமல் உடைத்தால் அரசுக்கு கேடு; முழுக் குடுமியும் உள்ளதாக உடைத்தால் நாட்டுக்கு கேடு; எனவே, கொஞ்சம் குடுமி உள்ளதாகச் செய்துகொண்டு உடைக்க வேண்டும்; உடைத்த பின்னர், அந்தச் சிறிதளவு குடுமியையும் நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

11.8 நந்திக்கு நிவேதனம்: பச்சரிசியையும், பயத்தம் பருப்பையும், வெல்லத்தையும், திருகின தேங்காயையும் ஒன்றாகக் கலந்து ப்ரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு விசேஷமாக நைவேத்யம் செய்திடல் வேண்டும்

11.9 திரை இடுதல்: பூஜையின் போது, நிவேதன காலத்தில் திரை இடாவிட்டால், பாபிகள் அதைப் பார்க்க நேரிட்டு, அதனால் அந்த நிவேதனமும், அது அங்கமாக உள்ள பூஜையும் பலனற்றதாகப் போய்விடும்.

சிவ ஆகமம் – உபசாரங்கள்

சிவ ஆகமம் – உபசாரங்கள்

10.1 உபசாரங்கள் மூன்று விதம்: ஸாங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம்.

(1) ஸாங்கம்: ஸ்நானம் (அபிஷேகம்), பாத்யம், ஆசமனம், வஸ்திரம், ஆபரணம், வாஸனை, சந்தணம் பூசுதல், அர்க்யம், புஷ்பம் சாத்துதல்

(2) உபாங்கம்: தூப-தீபம், ஸாயரக்ஷைகளில் விபூதி சாத்துவது, கொடை, சாமரம், கண்ணாடி, நிருத்தம், கீதம் ஆகியவற்றை தெரிவிப்பது

(3) ப்ரத்யங்கம்: நைவேத்யம் செய்தல், ஸ்ரீபலி, ஹோமம் செய்தல், நித்யோத்ஸவம், சுருகோதகம், ஸ்வஸ்திவாசனம்.

10.2. ஷாடச உபசாரங்கள் : உபசாரம் செய்யும் முறை :

1. ஆவாஹனம்,

2. ஸ்தாபனம்,

3. பாத்யம்,

4. ஆசமநீயம்,

5. அர்க்யம்,

6 அபிஷேகம்,

7 வஸ்த்ரம் சாத்துதல்,

8 ஆபரண, புஷ்ப அலங்காரம்,

9. தூபம் – தீபம்,

10. நிவேதனம்,

11. பலி இடுதல்,

12. ஹோமம் செய்தல்,

13. இசை, கீதம்,

14. ஸ்ரீபலி நாயகர் எழுந்தருளல் (உலா),

15. நர்த்தனம்,

16. உத்வாஸனம் (தோத்திரப் பாடல்கள் ஓதுதல்), நித்யோத்ஸவம்.

10.3 ஆவாஹனம்: அலங்காரத்திற்குப் பிறகு, சிவபெருமானை ஸத்யோஜாத மந்திரத்தினால் ஆவாஹனம் பண்ண வேண்டும்; பிறகு வாமதேவ மந்திரத்தினால் ஸ்தாபநம்; அகோர மந்திரத்தினால் ஸந்நிதாநம்; தத்புருஷ மந்திரத்தால் ஸந்நிரோதநம்; ஈசான மந்திரத்தினால் ஸம்முகீகரணம் (நன்முகத்தைக் காட்டியருள வேண்டுதல்) பண்ணவேண்டும்.

10.4 ஆவாஹனம்: அன்புடன் தனக்கு எதிர்முகமாக இருக்கச் செய்தல். பூஜை முடியும் வரை, தயை கூர்ந்த இலிங்கத்தில் அல்லது கலசத்தில் எழுந்தருளி இருக்க வேண்டும் என்று ப்ரார்த்திப்பதே ஆவாஹனம்.

10.5 ஸ்தாபனம்: பக்தியினால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறைவனை நிலைகொள்ளச் செய்யும் கிரியை.

10.6 ஸந்நிதானம்: “இறைவா! நான் என்றும் உன்னுடையவன்; என்னை ஆட்கொண்டு அருள் செய்து, என் கிரியைகளுக்கு ஆசி வழங்கு” எனக் கோருவது.

10.7 நிரோதம்: “தான் செய்யும் கிரியையின் முடிவு வரை தகைந்து இருக்குமாறு” இறைவனைக் கோருவது.

10.8 ஆவாஹனத்தின் போது பாத்யம், ஆசமனீயம், அர்க்யம் இவைகளைக் கொடுக்க வேண்டும்.

10.9 எவை, எங்கே?: பாத்யத்தை பாதத்திலும், ஆசமனத்தைக் கையிலும், அர்க்யத்தை சிரஸ்ஸிலும் கொடுக்க வேண்டும். சந்தணப் பூச்சை சரீரத்திலும், சிரஸ்ஸில் கிரீடத்தை வைத்து அதன்மேல் புஷ்பத்தையும் வைக்க வேண்டும். மூக்குக்கு அருகில் தூபத்தையும், நேத்திரத்துக்கு அருகில் தீபத்தையும் காட்ட வேண்டும். அந்நத்தையும், தாம்பூலத்தையும் கையில் கொடுக்க வேண்டும்.

10.10 விளாமிச்சம்வேர், சந்தணம், அறுகு, வெண்கடுகு – இவை நான்கும் பாத்ய நீரில் சேர்ப்பதற்கு உரியவை.

ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவற்பழம், ஜாதிக்ககாய், இவை ஆறும் ஆசமனீய நீரில் சேர்க்கக்கூடிய திரவியங்கள்.

எள், நெல், தருப்பை நுனி, ஜலம், பால், அக்ஷதை, வெண்கடுகு, யவம் இவை எட்டும் அர்க்ய நீரோடு சேர்க்ககூடிய திரவியங்கள்.

10.11 பாத்யம், அர்க்யம், ஆசமனீயம் கொடுக்க வேண்டிய காலங்கள்: அபிஷேக ஆரம்பம், அபிஷேக முடிவு, நைவேத்ய ஆரம்பம், நைவேத்ய முடிவு, தூப-தீபங்கள் காட்டும் நேரம் – இந்த 5 சமயங்களின் முடிவு, பூஜையின் முடிவு – இந்த 3 காலங்களில் அர்க்யமும் கொடுக்க வேண்டும். அர்க்யம் கொடுக்கும் காலம், பூச்சுப் பூசம் காலம், அபிஷேக காலம் – இந்த மூன்று காலங்களிலும் சந்தணமும் கொடுக்க வேண்டும்.

10.12 ஆவாஹனம், அர்க்யம், அபிஷேகம், தூபம், பூசும் காலம், நைவேத்யம், விசர்ஜனம் இந்த ஏழு காலங்களில் அஷ்ட புஷ்பம் சாத்த வேண்டும்.

10.13 தீப-ஷோடசோபசாரம் : 1. தூபம் 2. ஏகதீபம் (உருக்களி) 3. அலங்கார தீபம் (1,3,5,7,9 அல்லது 11 அடுக்குகள் கொண்ட தீபம். புஷ்ப தீபம், மஹா தீபம் என்றும் அழைக்கப் படுவதுண்டு ) 4. நாக தீபம், 5. வ்ருஷப தீபம் (நந்தி தீபம்) 6. புருஷா ம்ருக தீபம் 7. சூல தீபம் 8. கூர்ம (ஆமை) தீபம் 9. கஜ (யானை) தீபம் 10. ஸிம்ஹ தீபம் 11. வ்யாக்ர (புலி) தீபம் 12. கொடி தீபம் 13. மயூர தீபம் 14. பஞ்ச தட்டுடன் பூர்ண கும்ப தீபம் 15. நக்ஷத்ர தீபம் 16. மேரு தீபம். (இவற்றுள் சிலவற்றை விடுத்து, ஸூர்யன், சந்திரன், வ்ருக்ஷம் (மரம்) ஆகிய தீபங்களாலும் உபசரிப்பதுண்டு)

10.14 சுளுகேதகம் : மூல மந்த்ர ஜபம் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்து, ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, பிறகு “ஹே பரசேம்வரா! என்னுடைய பக்தியை, பூஜையை ஏற்றுக் கொள்வீராக!” என்று ப்ரார்த்தனை செய்து, எல்லா பூஜையின் பலனையும் தீர்த்தத்துடன் ஸ்ரீ சிவ பெருமான் கையில் கொடுக்க வேண்டும். தக்ஷிண ஹஸ்தத்தை நான்கு அங்குலமாகக் குறுக்கி, அந்தக் கையிலே புஷ்பம், தீர்த்தம் இவைகளை எடுத்து, ஸ்ரீ சிவபெருமான் திருவடியினடியில் விடவேண்டும். இது சுளுகோதகம். பிறகு சந்தணம் புஷ்பம் இவைகளைக் கையில் வைத்து, ஸம்ஹிதா மந்திரம் ஜபித்து, அதை சிவபெருமானுக்குச் சாத்தவேண்டும். (காரண ஆகமம் – பூஜாவிதி படலம் – ஸ்லோகம் 439-442). – ஷோடச உபசாரங்களுக்குப் பிறகு தேங்காய் பழம் தாம்பூலம் நிவேதனம் செய்து, கற்பூர ஹாரத்தி செய்தபின், சிவாச்சாரியார் சுளுகோதக சமர்ப்பணம் செய்து ப்ரார்த்திக்க வேண்டும். மூல மந்திரத்தை இயன்ற அளவு ஜபம் செய்து, அம்மந்திரத்தை கையில் புஷ்பத்துடன் சேர்த்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து, தீர்த்தத்தைக் கீழே விட்டு, சுவாமியின் வரத ஹஸ்தத்தில் புஷ்பத்தைச் சேர்த்து ஜப சமர்ப்பணம் செய்வதே சுளுகோதகம் என்பது. இவ்வாறு செய்யாத பூஜை பயனற்றதாகும்.

10.15 பூஜையின் ஆரம்பம், அபிஷேகத்தின் முடிவு, அர்ச்சனையின் முடிவு – இக்காலங்களில் தூபம், நெய்கலந்த தீபம் காண்பிக்கவேண்டும்.

10.16 தூபம் – பாபத்தைப் போக்கும்; தீபம் – பகைவரை அழிக்கும்; கடதீபம் – சாந்தி அளிக்கும்; நீராஜனம் – மேலுலகப் பலன் அளிக்கும்; விபூதி – மூவுலகிற்கும் ரக்ஷை; கண்ணாடி – லோக விருத்தி; குடை – நீண்ட ஆயுள்; சாமரம் – பாக்கியம்; சுருட்டி, விசிறி – மங்களம்.

10.17 தீபாராதனை செய்யும் முறை: தீபத்தின்மேல் புஷ்பத்தை வைத்து நீரீக்ஷணம், ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்; பின்னர், பஞ்ச ப்ரம்மத்தை நியாஸித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்து, திரிசூல முத்திரை காட்டி, மந்திர நிவர்த்தியின் பொருட்டு நேத்திரத்தின் நேரில் தீபத்தையும், நாசிக்கு நேரில் தூபத்தையும் கொடுக்க வேண்டும்.

10.18 சுவாமியின் முகத்திற்கு நேராகவும், மூக்கிற்கு நேராகவும், மார்புக்கு நேராகவும், வயிற்றுக்கு நேராகவும், கால்களுக்கு நேராகவும் – ஒவ்வொரு இடத்திலும் “ஓம்” உருவம் போல மூன்றுமுறை காண்பிக்க வேண்டும்.

சிவ ஆகமம் – அலங்காரம்

சிவ ஆகமம் – அலங்காரம்

9.1 ஆவுடையாருக்கு வஸ்த்ரம்: காலஸந்தி பூஜையிலே வெள்ளை வஸ்த்ரமும், உச்சிகால பூஜையின்போது சிவப்பு வஸ்த்திரமும், சாயரக்ஷை பூஜை காலத்தில் மஞ்சள் வண்ண வஸ்த்ரமும், அர்த்யாம பூஜையின்போது எல்லா வஸ்திரங்களும் சாத்தலாம்.

9.2 பழமையானது, கிழிந்ததும், வெடித்ததும், எலி கடித்ததுமான வஸ்திரங்களை விலக்க வேண்டும்.

9.3 கவச மந்திரத்தினால் பூணூலும், ஹ்ருதய மந்திரத்தினால் வஸ்திரமும் சாத்த வேண்டும். வாசனைத் திரவியங்களோடு கூடிய சந்தனம் சாத்த வேண்டும்.

9.4 அருக, கோஷ்டம், குங்குமம், கற்பூரம், பன்னீர் இவைகள் கலந்த சந்தணத்தை இறைவனுக்குச் சாத்த வேண்டும்

9.5 இலிங்கத்தின் சிரஸில் ஒருபோதும் புஷ்பம் இல்லாமல் இருக்கக் கூடாது.

9.6 கனிஷ்டை (சுண்டு விரல் அல்லது சிறு விரல்), அனாமிகை (மோதிர விரல் அல்லது அணி விரல்) விரல்களுக்கு இடையில் புது மலரை வைத்துக் கொண்டு, அங்குஷ்டம் (கட்டை விரல் அல்லது பெரு விரல்), தர்ஜனி (சுட்டு விரல் அல்லது ஆள்காட்டி விரல்) விரல்களால் நிர்மால்யத்தைக் களைய வேண்டும்; அப்படிக் களையும்போது, முன்விரலில் இடுக்கி வைத்துள்ள புதுமலரைச் சாத்த வேண்டும் (மத்யமை என்று கூறப்படும் நடு விரல் அல்லது பாம்பு விரல் இந்தக் கிரியையில் பயன் படுத்தப்படுவதில்லை.)

சிவ ஆகமம் – மலர்கள்

சிவ ஆகமம் – மலர்கள்

8.1 காலங்களுக்கேற்ற புஷ்பங்கள்:

காலை: தாமரை, பொரசு, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், தாழை,

நண்பகல்: வெண்தாமரை, அரளி, பொரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்கபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ்.

மாலை: செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதி, முல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம்.

8.2 அஷ்ட புஷ்பங்கள்: அறுகு, சண்பகம், பன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, ப்ரஹதி, அரளி, தும்பை இலைகள்.

8.3 எடுக்கப்பட்ட புஷ்பங்களின் உபயோக நாட்கள்: தாமரை – 5 நாட்கள், அரளி – 3 நாட்கள், வில்வம் – 6 மாதம், துளசி – மூன்று மாதம், தாழம்பூ – 5 நாட்கள், நெய்தல் – 3 நாட்கள், சண்பகம் – 1 நாள், விஷ்ணுக்ரந்தி – 3 நாள், விளாமிச்சை – எப்போதும்.

8.4 உபயோகப் படுத்தக் கூடாத புஷ்பங்கள்: கையில் கொண்டு வந்தது, தானாக விழுந்தது, கொட்டை (ஆமணக்கு) அல்லது எருக்க இலைகளில் கட்டிக் கொண்டு வந்தது, வாசனை அற்றது, மயிர் கலந்து கிடந்தது, புழு இருந்தது, மிகக் கடுமையான வாசனை உள்ளது, வாடியது, நுகரப்பட்டது, தானாக மலராமல் செயற்கையாக மலரச் செய்யப்பட்டது, அசுத்தமான முறையில் எடுத்து வரப்பட்டது, ஈர வஸ்திரத்துடன் எடுத்து வரப்பட்டது, யாசித்துப் பெறப்பட்டது, பூமியில் விழுந்து கிடந்தது ஆகியன. பொதுவாக, மலராத மொட்டுக்கள் (சம்பக மொட்டு நீங்கலாக) பூஜைக்கு உதவா.

8.5 துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தருப்பை, அருகு, அஸிவல்லி, நாயுருவி, விஷ்ணுக்ரந்தி, நெல்லி – ஆகிய செடி கொடி, மரங்களின் இலைகள் (பத்ரங்கள்) பூஜைக்கு உதவும்.

8.6 அக்ஷதை, வெள்ளெருக்கு, ஊமத்தை இவை விஷ்ணு பூஜைக்கு ஆகாது.

செம்பருத்தி, தாழம்பூ குந்தம், கேஸரம், குடஜம், ஜபா புஷ்பம் இவை சிவனுக்கு சுகாது.

அறுகு, வெள்ளெருக்கு மந்தாரம் – இவை அம்பாளுக்குக் கூடாது.

துளசி விநாயகருக்கு ஆகாது.

8.7 புஷ்பங்களைக் கவிழ்த்துச் சாத்தக்கூடாது; ஆனால் புஷ்பாஞ்சலியின்போது மலர்கள் கவிழ்ந்து விழுவது தவறல்ல. புஷ்பச் சேதம் செய்யக் கூடாது. அதாவது, ஒரு மலரை சிறிது சிறிதாகக் கிள்ளியோ வெட்டியோ பயன்படுத்தக் கூடாது.